உங்கள் Mobile வெடித்து தீப்பற்றுவதை தவிர்க்க கையாள வேண்டிய வழிமுறைகள்.

ஒரு மொபைல் போன் தீப்பிடிப்பதற்கு பின்னால் உள்ள 10 காரணங்கள்!




சமீபத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்தது பற்றி அறிந்திருப்பீர்கள், அந்த விமானத்தை அவசர அவரசமாக தரை இறக்கி பயணிகளை குதிக்க வைத்தது.

ஸ்மார்ட்போன்கள் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் அரிதாக இருந்தாலும், இந்த நிகழ்தகவு 99% நாம் நமது மொபைல் போன்களை எப்படி பயன்படுத்துகிறோம் என்கிற முறையைப் பொறுத்தது தான்.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 4,500 mAh மற்றும் அதற்கு மேற்பட்ட சக்திவாய்ந்த பேட்டரிகள் பாஸ்ட் சார்ஜிங் செய்யும் திறன்களுடன் இருப்பதால், உங்கள் ஸ்மார்ட்போனை எப்போதுமே கவனமாகப் பயன்படுத்துவது நல்லது.

நீங்கள் எந்த பிராண்டின் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனைவரும் ஒரே மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஏனெனில் பல புதிய போன்களின் பேட்டரிகள் எந்த எச்சரிக்கையையும் வழங்காமல், எந்த அறிகுறிகளும் இல்லாமல் வெடித்த சம்பவங்களும் உள்ளன.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஒரு மொபைல் வெடிப்பு சம்பவத்திற்கு பின்னால் இருப்பது "பயனர்களின் தவறு தான்" என்று கூறியுள்ளன.

நாம் என்ன தவறு செய்கிறோம்? எந்த தவறுகளை செய்ய கூடாது? எந்த காரணங்களால் ஒரு ஸ்மார்ட்போன் வெடிக்கவோ அல்லது தீப்பிடிக்க நேரிடும்?


01. சேதமடைந்த ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்துதல்.

நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை கீழே போடும்போதெல்லாம், வெளிப்படையாக எந்த பாதிப்பும் தெரியாவிட்டாலும் கூட உள்ளுக்குள்ளே அது கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே பெரிய விபத்துகளை சந்தித்த ஸ்மார்ட்போன்களை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி, அதை ஒரு சேவை மையத்தில் கொடுத்து சரிபார்க்கவும்.

ஏனென்றால், கிராக் செய்யப்பட்ட டிஸ்ப்ளே அல்லது பாடி ஃப்ரேம் வழியாக தண்ணீர் அல்லது வியர்வை ஒரு ஸ்மார்ட்போனுக்குள் அல்லது பேட்டரியின் பக்கம் நுழையலாம். அது உங்கள் ஸ்மார்ட்போனை இனி பயன்படுத்தவே முடியாதபடி செய்தால் கூட பரவாயில்லை, தீப்பிடிக்க நேர்ந்தால் அல்லது வெடித்து சிதறினால் என்ன ஆவது? ஆகவே பலமாக கீழே விழுந்த ஸ்மார்ட்போன்களிடம் உஷார் ஆக இருக்கவும்!


02. போலி அல்லது டூப்ளிகேட் சார்ஜர்களைப் பயன்படுத்துதல்.

பாஸ்ட் சார்ஜிங் அடாப்டர்களைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருங்கள். எப்போதுமே உங்கள் ஸ்மார்ட்போன்களுடன் வந்த சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். "5 நிமிஷம் சார்ஜ் பண்ணிட்டு கொடுத்துடுறேன் என்று கண்ணில் பட்ட, கையில் கிடைத்த சார்ஜர்களை எல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு பயன்படுத்தினால், விபரீதங்கள் ஏற்படலாம்.

குறிப்பாக நீங்கள் பயன்படுது சார்ஜர் அதிக பவர் ரேட்டிங் கொண்ட சார்ஜரா என்று கூட தெரியாமல், அதை பயன்படுத்துவது உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரிக்கு அழுத்தம் கொடுக்கலாம், அது உடனடியாக பாதிப்பை கொடுக்காவிட்டாலும் கூட, வரும் நாட்களில் சிக்கலை உண்டு செய்யலாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க டூப்ளிகேட் சார்ஜரை பயன்படுத்துவது இன்னும் மோசம். கம்பெனி சார்ஜர்களையே ஒன்றுக்கொன்று மாற்றி பயன்படுத்த கூடாது என்கிற நிலைப்பாட்டில் போலியான சார்ஜர்களை பயன்படுத்துவது வம்பை விலைகொடுத்து வாங்குவதற்கு சமம்.


03. மூன்றாம் தரப்பு அல்லது போலியான பேட்டரிகளைப் பயன்படுத்துதல்.

போலியான அல்லது டூப்ளிகேட் சார்ஜர்களை பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்தோ, அதைவிட மோசமான ஆபத்துகள் மூன்றாம் தரப்பு அல்லது போலியானா பேட்டரிகளை பயன்படுத்துவதிலும் உள்ளது.

எனவே தேர்ட்-பார்ட்டி அல்லது போலியான பேட்டரிகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். அத்தகைய பேட்டரிகளைப் பயன்படுத்துவது கடுமையான பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில் விலை குறைவான ஸ்மார்ட்போன் பேட்டரிகள் பெரும்பாலும் மோசமாக தயாரிக்கப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியாகவே இருக்கும்.

இது அதிக வெப்பத்தை வெளிக்கிடலாம் அல்லது தீப்பிடித்து எறியலாம் அல்லது வெடிக்கும் அஅபாயமும் உள்ளது. ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது விலை குறைவாக உள்ளதே என்று யாருமே போலியான ஸ்மார்ட்போனை வாங்குவது கிடையாது. அப்படி இருக்க, பேட்டரி மட்டும் ஏன் விலைகுறைவான, போலியானதாக வாங்க வேணும், அதையும் பிராண்டட் ஆக வாங்கலாமே.


04. ஸ்மார்ட்போன் சூடாக இருக்கும்போது கூட அதை தொடர்ந்து பயன்படுத்துதல்.

ஒரு கேமிங் ஸ்மார்ட்போனாக உருவாக்கம் பெறாத எந்த ஸ்மார்ட்போனுமே ஓவர் ஹீட் ஆவது மிகவும் சகஜம். தொடர்ச்சியான முறையில் கேமிங், போட்டோ அல்லது வீடியோ ஷூட்டிங் அல்லது லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் போது ஒரு ஸ்மார்ட்போன் ஹீட் ஆவது சகஜம் தான்.

அந்த நேரத்தில் ஸ்மார்ட்போனுக்கு கொஞ்சம் ஓய்வளிப்பது புத்திசாலித்தனம். இப்போது தானே ஹீட் ஆக தொடங்கி உள்ளது. இன்னும் கொஞ்சம் நேரம் பயன்படுத்தலாம் என்று எண்ணினால், அது விபரீதத்தில் சென்று முடியலாம். உங்கள் ஸ்மார்ட்போன் வழக்கத்திற்கு மாறாக சூடாக இருப்பதை நீங்கள் கவனித்தால், அதை சற்று நேரம் ஒதுக்கி வைக்கவும், உடன் அதிலிருந்து சற்று விலகியும் இருங்கள்.

குறிப்பாக ஸ்மார்ட்போனுக்கு ஒய்வு கொடுக்கும் நேரத்தில் அதை சார்ஜ் செய்யலாம் என்கிற டைம்-சேவிங் வேலைகளை தவிர்க்கவும். அது முழுமையாக கூல் ஆனதும் பயன்படுத்துவதை பற்றி யோசிக்கவும்.


05. மொபைலை சார்ஜ் செய்ய கார் சார்ஜிங் அடாப்டர்களைப் பயன்படுத்துதல்.

கார் சார்ஜிங் அடாப்டரைப் பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு பதிலாக நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய ஒரு பவர் பேங்கைப் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது.

ஏனென்றால், பெரும்பாலான கார் உரிமையாளர்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து தான் பாகங்களை இன்ஸ்டால் செய்கிறார்கள் மற்றும் Wiring integrity-யும் பாதிக்கப்படலாம். இது திடீர் பவர் அதிகரிப்புக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக உங்கள் ஸ்மார்ட்போன் வெடிக்கவும் கூடும்.


06. ஸ்மார்ட்போனை ஓவர் சார்ஜிங் செய்தல்.

மிகவும் பரவலாக நாம் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. தூக்கம் வரும் வரை ஸ்மார்ட்போனை பயன்படுத்திவிட்டு அதில் சார்ஜ் 60% இருக்கிறதா அல்லது 6% இருக்கிறதா என்பதை பொருட்படுத்தாமல் அதை அப்படியே சார்ஜிங் ஆகவிட்டு விடிந்த பின்னர் எழுந்து சார்ஜரில் இருந்து ஸ்மார்ட்போனை பிரிப்பது நம்மில் பலருக்கும் உள்ள பழக்கம்.

நினைவில் கொள்ளவும் உங்கள் ஸ்மார்ட்போனை 100%வரை சார்ஜ் செய்வது எப்போதும் அவசியமில்லை. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க விரும்பினால் அது 90% அடைந்த பிறகு சார்ஜ் செய்வதை நிறுத்துவது ஒரு நல்ல பழக்கமாகும்.

இது பேட்டரியின் ஆயுளை மட்டுமின்றி, பேட்டரியை சேதம் அடையாமலும் பார்த்துக்கொள்ளும். ஒரு ஸ்மார்ட்போனை அதிகமாக சார்ஜ் செய்வது பேட்டரியை விரிவடைய செய்யலாம் மற்றும் அது அபாயகரமானதாக மாறும் என்பதை மறந்துவிடாதீர்கள்.


7. நேரடியாக சூரிய ஒளியில் படும்படி வைத்து சார்ஜ் செய்வது.

உங்கள் போன் சார்ஜ் ஆகும்போது அது தேவையற்ற வெப்பத்திற்கு உட்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனவே, நேரடியாக சூரிய ஒளி அல்லது பிற வெப்ப மூலங்களிலிருந்து, குறிப்பாக சார்ஜ் செய்யும்போது அதை விலக்கி வைக்கவும்.


8. ஸ்மார்ட்போனின் மீது தேவையற்ற அழுத்தத்தை கொடுப்பது.

உங்கள் ஸ்மார்ட்போனின் மீது தேவையற்ற அழுத்தத்தை செலுத்தாதீர்கள், பொதுவாகவே அதன் மேல் கனமான பொருட்களை வைக்க வேண்டாம். குறிப்பாக சார்ஜ் செய்யும் போது தெரியாமல் கூட அதன் மெது எடை மிகுந்த பொருளை வைக்க வேண்டாம்.


9. ஸ்மார்ட்போனை பவர் ஸ்ட்ரிப் அல்லது எக்ஸ்டென்ஷன் கம்பியில் சார்ஜ் செய்தல்.

பவர் ஸ்ட்ரிப் அல்லது எக்ஸ்டென்ஷன் கம்பியைப் பயன்படுத்துவது ஷார்ட் சர்க்யூட் அபாயத்தை அதிகரிக்கும், எனவே அதை முற்றிலும் தவிர்க்கவும்.


10. லோக்கல் கடைகளில் ஸ்மார்ட்போனை ரிப்பேர் செய்தல். 

முடிந்தவரை உள்ளூர்களில் உள்ள பழுதுபார்க்கும் கடைகளில் உங்கள் ஸ்மார்ட்போனை சரிசெய்ய வேண்டாம். அங்கீகரிக்கப்பட்ட நிறுவன சேவை மையங்களுக்கு மட்டுமே செல்லுங்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை சரிசெய்ய உள்ளூர் கடைகளில் சரியான மற்றும் தேவைக்கேற்ற டூல்ஸ் இல்லாமல் இருக்கலாம், அதன் வழியாக ஸ்மார்ட்போனுக்கோ அல்லது அதன் பேட்டரிக்கோ ஏதேனும் நிறைகுறைகளை ஏற்படலாம்.

Post a Comment

Previous Post Next Post